சினிமாதிரைவிழா

இயக்குனர் என்னை கவுன்டர் அடிக்க விடவில்லை: யோகிபாபு

சென்னை: விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், ‘குட்டி புலி’ தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.‌
தமிழகம் முழுவதும் சக்திவேலன் வெளியிடும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ரியோ ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  படத்தின் இசையை விஜய் சேதுபதி வெளியிட, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

படத்தில் நடித்தது பற்றி யோகி பாபு பேசியதாவது:

தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமியுடன் நிறைய நேரம் பேசியுள்ளேன். அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இருந்தது. சரியான தருணம் அமையட்டும் என்றார். அதற்கேற்ப இந்த படத்தில், ‘நல்ல வேடம் இருக்கிறது, வாருங்கள்’ என அழைத்தார். ஒரு ஜிப்பாவும் வேஷ்டியும் வந்தது. அவரிடம் வேடிக்கையாக, ‘இதை யார் போட்டு கொண்டிருந்தது?’ என கேட்டேன். அவரும், ‘வி கே ராமசாமி’ என்றார்.


இந்தப் படத்தில் ஏகனுடைய பெரியப்பா வேடத்தில் நடித்திருக்கிறேன்.  படங்களில்  நான் லோக்கலாக ‘கவுன்ட்டர்’ அடித்து கொண்டிருப்பேன். ஆனால் இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட என்னை ‘கவுன்ட்டர்’ அடிக்க விடாமல் முழுவதுமாக கட்டுப்படுத்தி விட்டார் இயக்குநர் சீனு ராமசாமி.
ஏகன், படப்பிடிப்பு தளத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் போது, காட்சி நிறைவடைந்த உடன், ‘நான் நன்றாக நடித்தேனா..!’ என என்னிடம் கேட்பார். அவரிடம், ‘நானே சரியாக நடித்தேனா.. இல்லையா..! என தெரியாது. அமைதியாக இருந்து விடு’ என்றேன். இயக்குநர் எந்த தருணத்தில் எந்த வசனத்தை எப்படி மாற்றுவார் என்று யாருக்கும் தெரியாது. அதனால் இதெல்லாம் ஆண்டவன் கட்டளை என அவரிடம் சொல்வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.