திரை விமர்சனம்

சிக்சருக்கு பறந்த லப்பர் பந்து

சென்னை: பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க, தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைப்பில் வெளிவந்துள்ள லப்பர் பந்து படத்தில், அட்டக்கத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்துள்ளன. அதில் கூடுதலாக எந்த மாதிரியான விஷயங்களை சேர்த்து, திரைக்கதை அமைக்கின்றனர் என்பதே, படத்தின் வெற்றியை தீர்மானிக்கிறது.

அந்த வகையில், லப்பர் பந்து ரசிகர்கள் மனதில் இந்தியா – பாக்., கிரிக்கெட் போட்டியை போல், நீங்கா இடம் பெறும் என்பதில் மாற்றம் இல்லை.

அதிரடியான ஆட்டக்காரரான தினேஷ், கல்யாண வயதில் மகள் இருந்தும், வீட்டுக்கு தெரியாமல் வெளியூர் சென்று கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

தினேசின் மகளான சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியை ஊரால் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஹரிஷ் காதலிக்கிறார்.

கிரிக்கெட் விளையாட்டின் போது, தினேசுக்கும், ஹரிசுக்கும் மோதல் ஏற்படுகிறது. காதலியின் தந்தை தான் தினேஷ் என தெரிய வரும் போது, அதன் பின் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதி கதை.

நகரத்து கிரிக்கெட்டை மட்டுமே பார்த்த ரசிகர்கள், இப்படத்தின் கிராமத்து கிரிக்கெட்டை யதார்த்தமான மனிதர்களின் வாழ்வியலோடு பார்த்து ரசிக்கலாம்.

தினேசுக்கு இப்படம் மீண்டும் ஒரு ரவுண்ட் வர உதவும். மலையாள நடிகை ஸ்வாசிகாவுக்கும் இப்படம் தமிழில் மீண்டும் பல படங்களை பெற்றுத்தரும் என நம்பலாம்.

சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளிவெங்கட், பால சரவணன் என பலரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

ஷான்ரோல்டன் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. புருஷோத்தமனின் ஒளிப்பதிவு ரசிகர்களை படத்தோடு சேர்ந்து பயணிக்க வைக்கிறது.

கருத்தூசி போட்டு கதை சொல்லாமல், ரசிக்கும் கலை படைப்பாக லப்பர் பந்து படத்தை தந்த தமிழரசன் பச்சமுத்துவை கொண்டாடலாம்