திரை விமர்சனம்

அன்பின் அவசியத்தை உணர்த்தும் கோழிப்பண்ணை செல்லத்துரை

சென்னை: விஷன் சினிமா ஹவுஸ் தயாரிக்க, சீனுராமசாமி இயக்கத்தில் என்.ஆர். ரகுநந்தன் இசையமைப்பில் வெளிவந்துள்ள படம் கோழிப்பண்ணை செல்ல துரை.

ஏகன், சத்யா தேவி, பிரிகிடா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பலமுறை பார்த்த அண்ணன், தங்கை பாசக்கதை தான். ஆனால் அதை சீனுராமசாமி எப்படி கொடுத்துள்ளார் என்பதே இப்படத்தின் சிறப்பு.

தன் மனைவி துரோகம் செய்த காரணத்தால், பெற்ற மகன் மற்றும் மகளை தாயின் பாதுகாப்பில் விட்டு செல்கிறான் தந்தை.

கோழிப்பண்ணை நடத்தும் யோகிபாபுவின் தயவால் வளரும் அண்ணனும், தங்கையும், வளர்ந்து ஆளாகிறார்கள்.

கல்லுாரியில் காதல் வயப்படும் தங்கை மீது கோபம் கொள்ளும் அண்ணன், தங்கையிடம் பேசமால் இருக்கிறார். இவ்வேளையில் அநாதையாக விட்டுச் சென்ற பெற்றோரை ஏகன் காண நேர்கிறது. இதையடுத்து என்ன நடக்கிறது என்பது படத்தின் மீது கதை.

ஜோ படத்தில் நாயகனின் நண்பனாக நடித்த ஏகன் இதில் நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளார். செல்லத்துரை பாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தியுள்ளார்.

செல்லத்துரை தங்கையாக சத்யாதேவி நடித்துள்ளார்.

ஏகனை காதலிக்கும் பிரிகடா பாத்திரம் மட்டுமே பார்த்து சலித்துபோனது. காமெடியையும் கவுண்டர் அடிப்பதையும் துாரப்போட்டுவிட்டு குணச்சித்திரமாகவே மாறி நடித்துள்ளார் யோகிபாபு.

பின்னணி இசை படத்திற்கு பலம். பாடலும் பலம் சேர்த்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். அசோக்ராஜ் ஒளிப்பதிவு மண்வாசம்.

அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி குடும்ப உறவுகளின் உணர்வுபூர்வமான படைப்பாக தந்துள்ளார் சீனுராமசாமி. தர்மதுரை தந்தவர் மீண்டும் அன்பின் அவசியத்தை உணர்த்தியுள்ளார்.