எதை எப்போது உண்ண வேண்டும்
சென்னை: திருக்குறளில் மருந்து என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையை திருவள்ளுவர் தெளிவாய் எடுத்துரைக்கிறார். முன் உண்ட உணவு செரித்த பின்னரே மீண்டும் உண்ண வேண்டும்.
எனவே வரும் முன் காப்பதே நன்று என்பதை தாரக மந்திரமாய் ஏற்க வேண்டும். துாய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்.
இன்றைய காலக்கட்டத்தில் பலரும், உணவே மருந்து என்பதை மாற்றி, மருந்தே உணவு என்ற நிலையில் உள்ளனர்.
கொரோனாவுக்கு பின், உணவே மருந்து என்பதை பலரும் உணர்ந்துள்ளனர்.
இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஓய்வில்லா உழைப்பு, காலம் தவறிய உணவு உள்ளிட்டவையே பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு மூல காரணமாகின்றன.
மருத்துவம் சார்ந்த தேவைகளுக்கென்று குறிப்பிட்ட தொகையை ஒதுக்கும் அளவுக்கு, நம் உடல்நிலையைக் கவனிக்காமல், ஓர் இயந்திர வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நோயற்ற வாழ்க்கையை வாழ்வது மிகவும் எளிமையானது. எதை, எப்போது உண்ண வேண்டும் என்பது தெரிந்துவிட்டால் போதும்!
பித்தம், வாயு, கபம் ஆகிய மூன்றில் இருந்தே, உடல் பிரச்னை ஆரம்பமாகிறது. காலை 6:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை உடலில் 3 மடங்கு அமிலம் உற்பத்தியாகும் என்பதால், பித்தத்துக்கான சாத்தியம் அதிகம்.
இந்த நேரத்தில் புளித்த மாவால் தயாரிக்கப்படும் உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
பகல் 12:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை வாயு உருவாகும் நேரம். இந்த நேரத்தில் கிழங்கு, பருப்பு, பயறு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
மாலை 6:00 முதல் காலை 6:00 மணிவரை கபம் உருவாகும் நேரம். சூரியக் கதிர்கள் இல்லாததால் பாக்டீரியா எளிதில் நம் உணவில் தஞ்சமடையும். இந்த நேரத்தில் உணவைச் சூடாக உண்ண வேண்டும்.
எல்லா வற்றுக்கும் மேலாக இயற்கையான உணவே சிறந்த மருந்து.