எதை எப்படி சாப்பிட வேண்டும்
சென்னை: இந்த உலகில் உள்ள மற்ற உயிரினங்கள் அனைத்தும் தன் உடலுக்கு எது ஒத்துக்கொள்ளும் எது ஒத்துக்கொள்ளாது என்று பகுத்துணர்ந்து எதையும் உட்கொள்வதில்லை.
ஆனால், ஆறு அறிவுள்ள மனிதனுக்கு அந்தப் பகுத்துணர்வு இயற்கையாக உள்ளது. அதன் மூலம், ஒரு மனிதன் உணர்வுகளையும், உயிரின் தீர்க்காயுசையும் அதிகரிக்கவும் செய்யலாம், அதை அலட்சியமும் செய்யலாம்.
இன்று நன்றாக இருக்கும் உணவே கூட விஷமாகிவிடுவதுண்டு. உணவுப்பொருட்களைச் சூடாகச் சாப்பிடுவதால் தான் உடலுக்கு நன்மை.
நல்ல சத்தான உணவுப் பொருட்களை நன்கு சமைத்து சாப்பிட்டு வந்தால், நீண்ட காலத்திற்கு நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும், நோய் நொடி இல்லாத வாழ்க்கை வாழவே அனைவருக்கும் விருப்பம்.
அதனால், ரசாயனம் தவிர்த்து, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது, நம் உடலுக்கு எந்தப் பின் விளைவுகளும் நேராது.
உணவே மருந்து மருந்தே உணவு எனும்போது, எத்தனை வசதி இருந்தாலும், எதற்கெடுத்தாலும் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால் எப்படி? வாயையும் வயிறையும் கட்டுப்படுத்தப் பழகிக்கொண்டால், உடலும் மனமும் நாம் சொல்வதைக் கேட்கும்.
அதைவிடுத்து, சுகாதாரமற்ற சாலையோர உணவுகள் முதற்கொண்டு, பார்க்கும் எல்லாவற்றையும், வயிற்றில் இடம் கொள்ளாமல், நினைத்ததை எல்லாம் சாப்பிட முயன்றால், உடல் பெருகுவதுடன், ஜீரணக் கோளாறும் ஏற்படும்.
அதனால் பசிக்கும்போது மட்டும் உணவை உட்கொள்ளும் முறையை கடைபிடித்தால், தேவையின்றி வரும் உடல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அதுவே ஆரோக்கியமான உடல் நலத்திற்கு நம்மை இட்டுச் செல்லும்.