கல்லீரல், சிறுநீரகத்திற்கு நன்மை தரும் உணவுகள்
சென்னை: கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும் வீட்டு வைத்தியம் இது.
நம் உடலில் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் முக்கிய பாகங்கள் ஆகும். இவ்விரு உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். கல்லீரல் நமது உடலில் சேரும் பல்வேறு வகையான நச்சுக்களை அகற்றவும், சிறுநீரகம் அதனை வடிகட்டி வெளியேற்றவும் உதவுகிறது.
இதயத்தை விட கல்லீரலின் பணி தான் அதிகம். கல்லீரல் நம் உடலில் 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளை செய்கிறது. நம் உடலை சுத்தப்படுத்தும் உறுப்புகளில் உள்ள நச்சுக்களையும் நாம் அகற்றுவது அவசியம்.
எனவே உங்கள் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் உள்ள அழுக்குகளை நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் சில உணவுகள் குறித்து நாம் காண்போம்.
திராட்சை : திராட்சையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை இயற்கையாகவே நமது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை பாதுகாக்க உதவுகின்றன. கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் உண்டாகும் வீக்கத்தையும் தடுக்கிறது, அதன் மூலம் உறுப்புகளை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
பீட்ரூட் ஜூஸ் : பீட்ரூட் சாறு நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்கவும், அதிகரிக்கவும் உதவுகிறது என்பது பலருக்கு தெரியும் ஆனால் பீட்ரூட் சாறு சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.
பீட்ரூட் சாறு வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது, மேலும் கல்லீரல் பாதிப்பையும் குறைத்து, காயங்களைக் குணப்படுத்துகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிறுநீரகத்தை சுத்தப்படுத்த வாரம் மூன்று முறை பீட்ரூட் ஜூஸ் அருந்தலாம்.
காய்கறிகள் : காய்கறிகளில் காலிஃபிளவர், ப்ரோக்கோலி, காலே, முட்டைக்கோஸ் ஆகியவை ஊட்டச்சத்துக்களை நிறைந்தவை. இந்த வகை காய்கறிகள் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.
இது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களின் பக்க விளைவுகளிலிருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பாதுகாக்கிறது. எனவே உங்கள் தினசரி உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளை சேர்த்து கொள்ளுங்கள்.
மாதுளை : மாதுளை மிகவும் ஆரோக்கியமான பழமாகும், இது உடலை அனைத்து வகையான நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
மாதுளையில் உள்ள பொட்டாசியம் சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கிறது. இது சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்கவும், நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.
பெர்ரி அல்லது ஸ்ட்ராபெர்ரி: பெர்ரிகளில் ஸ்ட்ராபெர்ரி, க்ரான்பெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்ற பழங்கள் அடங்கும். இந்த பழங்கள் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் இரண்டிற்கும் நன்மை பயக்கும்.
சிறுநீரக செல்களில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களைக் குறைக்கும் பல்வேறு ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் பெர்ரி பழங்களில் நிறைந்துள்ளது. இதனால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க துணை புரிகிறது.
இதுதவிர நெல்லிக்காய், தர்பூசணி மற்றும் எலுமிச்சை உள்ளிட்டவையும் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு பயனிப்பவையே.