‘ல்தகா சைஆ ‘ திரைப்பட விமர்சனம்
சென்னை, அக். 05– நிஜத்தில் தம்பதியர்களான சதா – மோனிகா கதை மாந்தர்களாக நடித்துள்ள படம் ‘ல் தகா சைஆ ‘ .
இப்படத்தை சதா எழுதி இயக்கி உள்ளார். கப்புள் கிரியேஷன்ஸ் வழங்க
எஸ் கே டி ஃபிலிம் ஃபேக்டரி (SKD Film Factory) தயாரித்துள்ளது. இணைத் தயாரிப்பு எஸ்.கே.தனபால்.
படத்திற்கு ஒளிப்பதிவு எம் எஸ். மனோகுமார், பாடல்கள் இசை ஈ .ஜே. ஜான்சன், பாடல் வரிகள் க.சுதந்திரன், பின்னணி இசை சுரேஷ் ஷர்மா, படத்தொகுப்பு பரணி செல்வம்.
இப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் விநியோக நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிட்டுள்ளது.
படத்தின் கதை:
ராம் – ரம்யா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ள புதுமண ஜோடி. ராம் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். ரம்யா கர்ப்பமாக இருக்கிறார்.
இந்நிலையில் ராமுக்கு அடிக்கடி கெட்ட கனவுகள் வருகின்றன. அந்தக் கனவுகள் நிஜத்தில் பலிக்கின்றன.
ராம் ஒரு கால் கேர்ள் உடன் இருக்கும் போது அந்தப் பெண் இறந்து விடுகிறாள். ஒன்றும் புரியாமல் சடலத்தை எடுத்துக் கொண்டு காரில் பயணிக்கிற ராமுக்கு பல்வேறு இடையூறுகள். போலீஸ் மோப்பம் பிடித்து அவரைப் பிடிக்கிறது. தப்பி ஓட முயலும் அவரைச் சுடுகிறது .
இப்படி ஒரு கனவு வருகிறது.
ராம் காணும் ஒவ்வொரு கனவாக பலித்து வரும் நிலையில் இப்படி ஒரு கெட்ட கனவு வந்ததும் அவர் பதற்றம் அடைகிறார். இதனால் அவர் எதிலும் நிலை கொள்ளாமல் மனம் பிறழ்ந்தவர் போல் காணப்படுகிறார்.
இதைப் பார்த்து, தன் காதல் கணவனுக்கு ஏதோ ஆயிற்று என்று மனைவி கவலைப்படுகிறார். ராம் காணும் அந்தக் கனவு நிஜத்தில் நடந்ததா ? ராம் அதை எப்படி எதிர்கொண்டார் ? என்பதுதான் இப்படத்தின் மீதிக்கதை.
கனவு, நிஜ வாழ்க்கையில் பலிக்கிறது என்ற ஒரு வரியை எடுத்துக்கொண்டு ஒரு சுவாரசியமான க்ரைம் திரில்லரை உருவாக்கியுள்ளார் ராமாக நடித்த இயக்கித் தயாரித்துள்ள சதா.
எப்போதும் பதற்றமான முகத்தை வைத்துக்கொண்டு, இறுக்கமான மனதோடு இருக்கிறார். படத்தில் அவர் கலகலப்பாக இருக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு. எனவே அவருக்குப் பல்வேறு வகையான நடிப்பு வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அவரை மேலும் அழகான கோணத்தில் காட்டி இருக்கலாம்.
படத்தின் நாயகி ரம்யாவாக நடித்திருக்கும் மோனிகா செலேனா ஒரு வணிகப் படத்திற்கான முகவெட்டும் திரைத் தோற்றமும் கொண்டவராக இருக்கிறார். அவர் வணிக ரீதியிலான ஒரு கதாநாயகியின் திரைத் தோற்றத்தை அவர் ஈடு செய்கிறார்.
அந்த அளவிற்கு அவர் தோற்றமும் நடிப்பும் ஒரு அனுபவம் உள்ள நடிகையைப் போல் இருக்கிறது. ஆசை, கோபம், பதற்றம், சந்தேகம் என்று பல்வேறு முகபாவனைகளைக் காட்ட அந்தப் பாத்திரம் அவருக்கு வாய்ப்பளித்துள்ளது. அதையும் அவர் சரியாகப் பயன்படுத்தியுள்ளார்.
கதாநாயகனின் மாமாக வருகிறார் படத்தின் பாடல்கள் எழுதி இருக்கும் சுதந்திரன். நகைச்சுவை நடிகர் இடத்தை நிரப்ப அவர் முயன்றுள்ளார். அவருக்கும் பெரிதாகச் சோபிக்கும் படியான காட்சிகள் இல்லாதது ஒரு குறை.
படத்தின் கதை சில குறிப்பிட்ட இடங்களில் நடக்கிறது. ஆனால் போரடிக்காத வகையில் உரிய ஒளிப்பதிவை வழங்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் மனோகுமார்.
குறிப்பாக ஊட்டி, ஈரோடு, ஏற்காடு, சென்னை, கோவை, பாண்டிச்சேரி பகுதிகளில் கண்ணுக்குக் குளிர்ச்சியான இடங்களில் படப்பதிவு செய்துள்ளார்.
பாடல்களுக்கு ஜான்சன் இசையமைத்துள்ளார். மூன்று பாடல்களுமே கேட்கும் ரகம். வரிகளும் குறை சொல்ல முடியாதவை.
குறிப்பாக’ ஒரு நாள் இரவு’ பாடல் காட்சிகளில் தம்பதிகள் இறுக்கமான நெருக்கமான காட்சிகளில் நடித்து இளமைக் கொடியைப் பறக்கவிட்டுள்ளார்கள். படமாக்கி உள்ள விதமும் ஒரு ஆல்பம் பாடலுக்கான தரத்தில் உள்ளது.
எல்லாப் பாடல்களையும் தனித்துக் கேட்கும் போதும் பார்க்கும்போதும் இனிமையாக உள்ளன. ஆனால் பரபரப்பான ஒரு திரில்லராக நினைத்து எடுக்கப்பட்டிருக்கும் படத்தில் பாடல் என்பது வேகத் தடை தான்.
சுரேஷ் ஷர்மாவின் பின்னணி இசையில் வழக்கமான இசைக்கருவிகளின் ஓசை இல்லாமல், புதிய வகையில் உள்ளது படத்திற்குப் புதிய நிறம் தருகிறது.
ராம் வாழ்க்கையில் நடப்பது கனவா? நிஜமா? என்று கண்ணாமூச்சி காட்டும் சில காட்சிகள் பரபரப்பூட்டும் ரகம் .
கனவில் வருவது நிஜத்தில் பலிக்கிறது என்ற ஒரு விஷயத்தைச் சொல்வதற்குப் பாதிப்பட நேரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். அது பார்ப்பவர்களுக்குச் சோர்வூட்டுகிறது.
சில காட்சிகளில் நடப்பது கனவா நிஜமா என்று குழம்ப வைக்கிறார்கள்.
மொத்தத்தில் மிகக் குறைந்த லொகேஷன்களில் நடக்கும் கதையை அந்தக் குறை தெரியாத அளவிற்குப் படத்தை நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பரணி செல்வம்.
மொத்தத்தில் புதிய படக் குழு தயாரித்திருந்தாலும் பல்வேறு சின்ன பட்ஜெட் படங்களை விட இந்தப் படம் பட உருவாக்கத்தில் ஆறுதல் அளிக்கிறது என்று கூறலாம்