அரசியல்

பொன்முடியும் சர்ச்சையும்…

சென்னை, ஏப். 11– தி.மு.க. அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி ஆர்வமிகுதியில் எதையாவது பேசி, வம்பில் மாட்டுவது வாடிக்கையாகி வருகிறது. இது சில சமயம் சர்ச்சையையும் ஏற்படுத்தி விடுகிறது.

அந்த வகையில், அரசு பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம் செய்வதை அமைச்சர் பொன்முடி, ‘ஓசி பயணம்’ என்று பேசியதும், பெண் மக்கள் பிரதிநிதி ஒருவரை சாதியின் பெயரைச் சொல்லி குறிப்பிட்டு கேட்டதும் சர்ச்சையானது.

மேலும், பள்ளிக்கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற பொன்முடி ‘எனக்கோ ஓட்டு போட்டு கிழிச்சிட்ங்க. இங்க வந்து கேக்குறீங்க. அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.

ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு போடாதவர்களுக்கும் நல்லதை செய்ய சொல்லியிருக்கிறார் முதல்வர். ரோடு போட்டது நான்; பஸ் விட்டது நான்; குடி தண்ணீர் விட்டது நான், ஏதாவது குறை இருந்தால் எழுதிக் கொடுங்கள், சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு கத்திக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்’ என பேசினார்.

மேலும், விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லுாரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொன்முடியிடம், கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தக்காளி விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அமைச்சர் பொன்முடி விளக்கம் அளிக்காமல், ஒருமையில் பேசினார்.

இதனை தொடர்ந்து, அவரது உயர்க்கல்வித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, வனத்துறை ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த 6ம் தேதி நடந்த தி.மு.க. கூட்டத்தில், சைவ, வைணவ மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளது தற்போது சர்ச்சையாகி உள்ளது. பொன்முடியின் பேச்சுக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து பொன்முடி தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் வனத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை.

தொடர்ந்து, துணைப் பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டத்தை பார்த்ததும், ஒரு வித ஆர்வத்தில் பேசும் பொன்முடி போன்றவர்கள், கட்டுப்பாட்டை இழக்காமல் பேச வேண்டியது அவசியமாகிறது. இதுபோன்ற பேச்சால், தி.மு.க.,வுக்கும், முதல்வருக்கும் அவப்பெயர் ஏற்படுவது தவிர்க்க வேண்டிய ஒன்றாகியுள்ளது.