தமிழ்நாடு அழகுக்கலை துறை தொழில் முனைவோர் சங்க முகாம்
சென்னை, ஏப். 16– அழகுக்கலை தொழில் துறையில் ஈடுபட்டுள்ள கலைஞர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு, தொழில் மேம்பாடு, மேலும் திறமையானவர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக தமிழ்நாடு அழகுக்கலை துறை தொழில் முனைவோர் சங்கம் (டி.பி.ஐ.இ.ஏ.,) கடந்த மார்ச் 19ம் தேதி சென்னையில் துவங்கப்பட்டது.
துவக்க நாளிலேயே இந்த சங்கத்தில், 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இணைந்தனர். தொடர்ந்து பலரும் ஆர்வமுடன் இணைந்து வரும் நிலையில், சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்காக கடந்த வாரம் சென்னையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பெடரல் வங்கி கிளையின் மேலாளர் பி.ஆனந்தி, சான்றிதழ் பெற்ற தொழில் முறை ஒப்பனை கலைஞரும் பயிற்சியாளருமான செல்டன் ஆர்டிஸ்ட்ரி மற்றும் பூக்கள் உருவாக்குவதில் பல்வேறு விதமான சாதனைகளுக்கு சொந்தக்காரரும் வழிகாட்டியுமான சி.பிரபாவதி ஆகியோர் முன்னிலையில் இந்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அரசு சான்றிதழ் பெறுவது, பல்வேறு விதமான வங்கிக் கடன்கள் பெறுவது, உதய் திட்டத்தில் இலவச பதிவு செய்வது எப்படி, மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விளக்கி சொல்லப்பட்டது.
மேலும், இந்திய மேற்கத்திய மணமக்கள் அலங்காரம் மற்றும் பூங்கொத்து உருவாக்குவது குறித்த பயிற்சி என பல விஷயங்கள் இந்த முகாமில் உறுப்பினர்களுக்கு விரிவாக கற்றுக் கொடுக்கப்பட்டன.
மேலும் ‘ஸ்கில் இந்தியா’ சார்பாக முகாமில் பங்கேற்ற பொறுப்பாளர்கள் குறைந்த செலவில் உறுப்பினர்களுக்கு பயிற்சி கொடுப்பதாக கூறியுள்ளனர்.
குறிப்பாக, இந்த அழகு கலையில் சான்றிதழ் பெறுவதற்காக 40,000 முதல் 50,000 ரூபாய் வரை என மோசடிகளில் சிக்கி வீணாக செலவழிக்காமல் மிக குறைந்த கட்டணத்திலேயே இந்த சான்றிதழை பெற முடியும் என எடுத்துரைத்தனர்.
வங்கி நிர்வாகிகளும் இப்படி வழங்கப்படும் சான்றிதழே வங்கி கடன் பெறுவதற்கு போதுமானது எனது உறுதி அளித்துள்ளனர். அந்த வகையில் உறுப்பினர்கள் யாரும் எந்தவிதமான மோசடியிலும் சிக்கிவிட வேண்டாம் என்கிற விழிப்புணர்வு முகாமில் முக்கியமாக எடுத்துரைக்கப்பட்டது.
பல்வேறு பிரபலங்களுக்கு ஒப்பனை கலைஞராக பணியாற்றும் செல்டன் ஆர்டிஸ்ட்ரி ஒப்பனை குறித்து உறுப்பினர்களுக்கு விரிவாக வகுப்பு எடுத்தார். தொடர்ந்து பூக்கள் உருவாக்கும் பயிற்சி வகுப்பும் நடைபெற்றது.
புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ் மற்றும் 2,000 ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்கள் கொடுத்து சிறப்பிக்கப்பட்டனர்.
வருடத்திற்கு இதுபோல நான்கு இலவச வகுப்புகள் எடுக்கப்படும் என ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள நிலையில் முதல் வகுப்பாக இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.