சென்னை

ஏடாகூடமாய் சிக்கிய பசு

சென்னை: அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (46). மேய்ச்சலுக்கு சென்ற தனது பசு மாடு வீட்டிற்கு வராததால் கடந்த 2 நாட்களாக அதைத் தேடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் பட்டரவாக்கம் ஆவின் பால் பண்ணை அருகே இரண்டு கண்டெய்னருக்கு நடுவில் பசுமாடு ஒன்று சிக்கி இருப்பதாக அம்பத்தூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத் துறையினர் இரண்டு கண்டெய்னர்களுக்கு நடுவில் சிக்கி இருந்த பசு மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பசு மாடு மிகவும் சோர்வாக இருந்ததால் அதை கயிறு கட்டி வெளியே கொண்டு வரும் பணி பலன் அளிக்கவில்லை. எனவே ஜே.சி.பி வாகனத்தை வரவழைத்த தீயணைப்பு துறையினர் கண்டெய்னரை நகர்த்தி, பசுமாட்டை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.