ஏ.டி.எம் கார்டை மாற்றி கொடுத்து பணம் சுருட்டிய திருடனுக்கு வலை
சென்னை, மே 7- ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க சென்ற முதியவரிடம் உதவி செய்வது போல் நடித்து, அவரது வங்கி கணக்கில் இருந்து, 42,000 ரூபாயை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரம்பூர், முனுசாமி தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 69. இவர், சி.எம்.டி.ஏ.,வில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இன்று காலை 8:00 மணி அளவில் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்.,க்கு பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு ஏற்கனவே இருந்த அறிமுகமில்லாத நபர் ஒருவர், ராஜேந்திரனுக்கு உதவி செய்வது போல, பணம் எடுத்துக் கொடுத்து விட்டு, ராஜேந்திரனின் ஏ.டி.எம்., கார்டுக்கு பதில் போலி டம்மி ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து அனுப்பியுள்ளார்.
ராஜேந்திரன் பணத்துடன் வீட்டிற்கு வந்து பார்த்த போது, அவரது மொபைல்போனுக்கு, 42,000 ரூபாய் பணம் எடுத்ததற்கான குறுஞ்செய்தி வந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் தன் கையில் இருந்த ஏ.டி.எம்., கார்டை பார்த்த போது, அது தனது இல்லை, போலி என்பது தெரிய வந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜேந்திரன், சம்பவம் குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். செம்பியம் போலீசார் ஏ.டி.எம்.,மில் இருந்த சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, முதியவரை ஏமாற்றிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
சென்னையில் இதுபோன்ற சம்பவங்கள் பல அரங்கேறி வருகிறது. டிஜிட்டல் கைது மற்றும் முதியவர்களை குறி வைத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால், பணம் மற்றும் நகைகளை கையாள்பவர்கள் அறிமுகமில்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகிறது.

