நட்டி – விதார்த் இணையும் ‘சொடக்கு’ வசனகர்த்தாவாக மாறிய இயக்குனர் சரண்
சென்னை, ஜூலை 25- தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியாவின் ஜூபிலி பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து, மாஸ்டர்பீஸ் நிறுவனம் வழங்கும் புதிய அதிரடி திரில்லர் திரைப்படமான ‘சொடக்கு’ படத்தை தயாரித்து வருகின்றன.
‘சொடக்கு‘ என்ற தலைப்பே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. “சொடக்கு போடுற நேரத்துல எல்லாம் மாறிப்போச்சு… வாழ்க்கையே தலைகீழாக ஆயிடுச்சு” என்று மக்கள் பேசும் அந்த ஒரு கணத்தில் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத மாற்றங்களே இப்படத்தின் மையக் கதை.

இந்தப் படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, ‘அமர்க்களம்’, ‘ஜெமினி’, ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் சரண் வசனம் எழுதியுள்ளார். கதை, திரைக்கதை எழுதி இயக்கும் பொறுப்பை காமராஜ் மனோன்மணி ஏற்றுள்ளார்.
“நாளை நடப்பது இன்றே தெரிந்தால் என்ன ஆகும்?” என்ற சுவாரஸ்யமான கேள்வியை மையமாகக் கொண்டு, மனிதர்களின் வாழ்க்கையில் உருவாகும் குழப்பங்கள், மாற்றங்கள் மற்றும் அவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கூறும் வித்தியாசமான திரைக்கதையுடன் இப்படம் உருவாகியுள்ளது. இதன் மூலம் ரசிகர்களுக்கு புதிய வகையான திரில்லர் அனுபவம் கிடைக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நட்டி மற்றும் விதார்த் முதல் முறையாக இணைந்து நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இவர்களுடன் கயல் ஆனந்தி, ரக்ஷிதா (சரவணன் மீனாட்சி புகழ்), மலேசியா ரஜினிகாந்த் டத்தோ கணேசன், அபிஷேக் சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், இந்த தமிழ் திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் மலேசியாவில் நடைபெற்றிருப்பதால், அங்குள்ள அழகிய இடங்கள் ரசிகர்களுக்கு கண்கவர் காட்சியனுபவத்தை வழங்கும் என கூறப்படுகிறது.

தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

