எம்.வி.எம்., பள்ளி மாணவர்களின் ஆரோக்கிய உணவு குறித்து விழிப்புணர்வு பேரணி
சென்னை, ஜூலை 17- சென்னை சவுகார்பேட்டையில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில், ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

பூக்கடை சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தின் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியபடி முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.

தொடர்ந்து, பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலையில் மாணவர்கள் விழிப்புணர்வு நாடகத்தை நடத்தி, சத்தான உணவின் முக்கியத்துவம், துரித உணவுகளின் பாதிப்பு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.

மேலும், போக்குவரத்து போலீசாரும் மாணவர்களுடன் இணைந்து, தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் கட்டுதல், போக்குவரத்து விதிகளை மதித்தல், கைப்பேசியைப் பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், போலீசார் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டு, விபத்தில்லா பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


