மெரீனா கடற்கரையில் புதிய நினைவிடங்கள் வேண்டாம்: முதல்வருக்கு குடியிருப்போர் நலசங்கங்கள் கோரிக்கை
சென்னை, ஜூலை 9 – மெரீனா கடற்கரையில் புதிய நினைவிடங்கள் வேண்டாம் என கோரிக்கை விடுத்து, தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு குடியிருப்போர் நலசங்க கூட்டமைப்பு சார்பில் தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
சென்னையின் கடற்கரைகள் மனிதகுலத்திற்கு இயற்கை வழங்கிய அரிய பொதுச் சொத்தாகும். இந்த கடற்கரைகள் எந்த அரசியல் கட்சிக்கும், எந்த தலைவருக்கும், எந்த அரசுக்கும் சொந்தமானவை அல்ல. அவை மக்களின் சொத்து; வருங்கால தலைமுறைகளின் உரிமை.
ஆனால், கடந்த பல ஆண்டுகளாக கடற்கரைப் பகுதிகள் அரசியல் தலைவர்களின் சமாதிகள் மற்றும் நினைவிடங்களாக மாறி வருகின்றன. இது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. இதனால், இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு, அவற்றின் இயல்பையே மாற்றும் நிலை உருவாகியுள்ளது.
இன்று பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லும்போது, இயற்கையை ரசிக்க செல்கிறார்களாக அல்லது நினைவிடங்களின் நடுவே நடக்கிறார்களா? இயற்கைச் சூழலை நிரந்தர கட்டுமானங்களால் மாற்றுவது பொதுநலனுக்கு உகந்ததல்ல.
தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவது அவசியம். ஆனால் அந்த மரியாதை, பொதுமக்களின் இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையும், பொது நிலங்களையும் ஆக்கிரமிக்கும் வகையில் இருக்கக் கூடாது. நினைவிடங்கள் அமைக்க வேண்டுமெனில், அதற்கென தனியாக ஒதுக்கப்பட்ட இடங்களில் அமைக்கலாம்; இயற்கை கடற்கரைகளை மாற்ற வேண்டிய அவசியமில்லை.
எனவே, தமிழக அரசு உடனடியாக ஒரு தெளிவான கொள்கையை அறிவித்து, இனி எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் அல்லது எந்த முக்கிய பிரமுகராக இருந்தாலும், கடற்கரைப் பகுதிகளில் புதிய சமாதிகள் அல்லது நினைவிடங்கள் அமைக்க அனுமதி வழங்கப்படாது என்ற அரசு ஆணையை பிறப்பிக்க வேண்டும்.
இது எந்த ஒரு தலைவருக்கும் எதிரான கோரிக்கை அல்ல. இது இயற்கையைப் பாதுகாக்கும் கோரிக்கை; மக்களின் உரிமையைப் பாதுகாக்கும் கோரிக்கை; வருங்கால தலைமுறைகளுக்காக கடற்கரைகளை பாதுகாக்கும் கோரிக்கை.
தலைவர்களை வரலாறு நினைவுகூரட்டும்; கடற்கரைகள் இயற்கையாகவே நிலைத்திருக்கட்டும். தமிழக அரசு இன்று எடுக்கும் இந்த முடிவு, ஒரு நிர்வாக முடிவாக மட்டுமல்ல; வருங்கால தலைமுறைக்காக இயற்கையைப் பாதுகாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக இருக்கும். எனவே, கடற்கரைகளில் இனி எந்த புதிய சமாதியும், நினைவிடமும் அமைக்கக் கூடாது என்ற அரசு ஆணையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

