சென்னை

திருச்செந்துாரில் மொபைல் போனுக்கு தடை தீவிரமாகும்

சென்னை, ஜூலை 1- திருச்செந்துார் முருகன் கோயிலில் மொபைல்போன் பயன்பாட்டை தடுக்கும் வகையில் ஜூலை  முதல் தேதி முதல் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

திருச்செந்துார் முருகன் கோயிலில், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவின்படி, 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி முதல் மொபைல்போன் பயன்பாட்டு தடை நடைமுறையில் உள்ளது.

தற்போது உத்தரவை தீவிரமாக அமல்படுத்தும் வகையில், 2026ம் ஆண்டு ஜூலை முதல் தேதி முதல் மொபைல்போன் தடை உத்தரவு தீவிரமாக்கப்படுகிறது.

அதன்படி, பொது தரிசனம், விரைவு  தரிசனம், மூத்த குடிமக்கள் தரிசனம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை உள்ளிட்ட அனைத்து நுழைவுவாயிலிலும் பக்தர்கள் தீவிரமாக சோதனையிட்ட பின்னரே அனுமதிக்கப்பட உள்ளனர்.

எனவே, பக்தர்கள் அவரவர் மொபைல்போன்களை அதற்குரிய லாக்கர்களிலோ அல்லது தங்கும் அறைகளிலோ வைத்து விட்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மொபைல்போன்கள் கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்பட்டு லாக்கரில் வைக்கப்படும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.