அரசியல்

திருச்சியில் இல்லை; ஆனால் அரசியலுக்கு வருவேன்: லாரன்ஸ்

சென்னை, ஜூலை 1-

திருச்சி கிழக்கு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், மற்ற ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவேன் எனக்கூறியுள்ளார்

தமிழக சட்டசபை தேர்தலில், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற த.வெ.க., தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது ஏழு தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக பிரபலமான நபர்களை நிறுத்த விஜய் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் அரசியலுக்கு வர முடிவு எடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ், இதுப்பற்றி மக்களின் கருத்தையும் கேட்டறிந்தார்.

தற்போது அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் நான் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது, மக்களை தெரு நாயுடன் ஒப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது.

அதுப்பற்றி அப்போதே விளக்கமளித்து விட்டேன். ஆனாலும் சிலர் அதை வைத்து சர்ச்சையாக்கி வருகின்றனர். நான் அரசியலுக்கு வரும் முடிவை எடுத்த பின் என் உறவினர்களிடம் கேட்பது போல் தான், மக்கள் கருத்தையும் கேட்டேன். இதில் என்ன தவறு?

பலரும் திருச்சி கிழக்கில் போட்டியிடுங்கள் என்கின்றனர். விஜய் எப்போது ஹீரோ ஆனாரோ அப்போது முதல் அவருக்காக ஒரு ரசிகர் போஸ்டர் ஒட்டியிருப்பார். விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் அவருக்காக கட்சிக்கு உழைத்திருப்பார். அவர்கள் தான் திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டாமா? நான் நிற்க வேண்டுமா? யார் நிற்க வேண்டும் என்பதை விஜய் முடிவு செய்வார். அவர் யாரை நிற்க வைத்தாலும் வெற்றி பெற போகிறார்கள்.

ஒரு கட்சியில் தொண்டராக இருந்து பணியாற்றிய பின் தான் தேர்தலில் போட்டியிட வேண்டும். பின் கட்சி தலைமை பார்த்து ஒரு பதவி தருவர்.  விஜய் நினைத்தால் ஆயிரம் குழந்தைகளுக்கு நல்லது செய்ய முடியும்.

திருச்சி கிழக்கு தொகுதியில் தான் போட்டியிட மாட்டேன் என்று சொன்னேன். வேறு எங்கும் போட்டியிட மாட்டேன் என்று சொல்லவில்லை. பொறுமையாக நிற்போம். அவரசப்பட்டு எதையும் செய்ய வேண்டாம். நிதானமாக சிந்தித்து அரசியலுக்கு வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.