தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர், இயக்குநர் செழியன் மறைவு: திரையுலகில் மேலும் ஒரு சோகம்
சென்னை: தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன், 57 புற்றுநோய் பாதிப்பால் இன்று காலை காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செழியன், சினிமா மீதான தீவிர ஆர்வத்தால் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் அவர்களிடம் உதவி ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார்.
இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கிய, “கல்லூரி” திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான அவர், பின்னர் பாலா இயக்கிய “பரதேசி”, “தாரை தப்பட்டை”, சீனு ராமசாமியின் “தென்மேற்கு பருவக்காற்று”, ராஜு முருகனின் “ஜோக்கர்”, பாரதிராஜா – கே. பாலச்சந்தர் இணைந்து நடித்த “ரெட்டை சுழி” உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து தனக்கென தனி முத்திரையை பதித்தார்.
“டூ லெட்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செழியன், அதற்கு ஒளிப்பதிவையும் தானே மேற்கொண்டார். அந்த திரைப்படம் தேசிய விருதை வென்று அவரது படைப்பாற்றலுக்கு மேலும் அங்கீகாரம் பெற்றுத் தந்தது.
யதார்த்தமான காட்சியமைப்பு மற்றும் இயல்பான கதை சொல்லும் பாணிக்காக அறியப்பட்ட செழியன், புதிய தலைமுறை திரைப்படப் படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கில் பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வந்தார். அந்தப் பயிற்சி மையத்தில் பயின்ற 34 பேருக்கு ஒரே நேரத்தில் திரைப்படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதன் அறிமுக விழா சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மற்றும் எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்து “A Little Dream”, “திருவிழா” உள்ளிட்ட குறும்படங்களையும் அவர் இயக்கியுள்ளார். திரைப்படம் தொடர்பான “உலக சினிமா” என்ற நூலையும் எழுதியுள்ளார்.
திரைப்படத் துறையில் எளிமையான மனிதராக அறியப்பட்ட செழியன், சம்பளத்தை விட கலைக்கு முக்கியத்துவம் அளித்தவர். பல திரைப்படங்களில் சம்பளம் பெறாமல்கூட பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செழியனின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகமான ராவணன் குடில் வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், இயக்குநர் பாலா உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சென்னை போரூர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
செழியனுக்கு மனைவி பிரமா மற்றும் மகள் அதிதா உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது மகன் அரிய வகை நோயால் உயிரிழந்திருந்தார்.
சமீப காலமாக தமிழ் திரையுலகம் தொடர்ச்சியாக முக்கிய கலைஞர்களை இழந்து வருகிறது. இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோரின் மறைவு ஏற்படுத்திய சோகத்தில் இருந்து மீளாத நிலையில், தற்போது தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியனின் மறைவும் திரையுலகினரையும் ரசிகர்களையும் பேரதிர்ச்சியிலும், ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.

