காஞ்சிபுரம் பேசும் பெருமாள் கோவில்: ஆயிரம் மடங்கு பலன் தரும் புண்ணிய தலத்தின் வரலாறு
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், கூழம்பந்தலில் அமைந்துள்ள அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோவில், வைணவ சமயத்தின் சிறப்புமிக்க தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த தலத்தில் விரதம், தானம், வேள்வி, பிராயச்சித்தம் உள்ளிட்ட எந்த தர்மச் செயலையும் செய்தாலும், அது ஆயிரம் மடங்கு பலன் தரும் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாகும்.
கோயில் விவரங்கள்
- மூலவர்: அருள்மிகு பேசும் பெருமாள்
- தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி
- ஊர்: கூழம்பந்தல்
- மாவட்டம்: காஞ்சிபுரம்
- மாநிலம்: தமிழ்நாடு
- திறந்திருக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
தலச் சிறப்பு
சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்தப் பழமையான திருக்கோவில், தெலுங்குச் சோழ மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கி.பி. 1270ம் ஆண்டில் மன்னர் ஸ்ரீ விஜயகண்ட கோபாலன் இத்தலத்திற்கு வந்து பெருமாளிடம் பேசியதாக கோயிலின் வாயிற்படிகளில் கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த தலத்தில் விரதம், தானம், யாகம், வேள்வி, பிராயச்சித்தம் போன்ற தர்மச் செயல்கள் செய்தால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும் என்ற ஐதீகம் நிலவுகிறது. பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வரதராஜராக பேசும் பெருமாள் அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது.
பேச்சுத்திறன் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு வழிபாடு
பேச முடியாத, நடக்க முடியாத, காது கேளாத குழந்தைகளுக்காக இத்தலத்தில் சிறப்பு பரிகார வழிபாடு நடைபெறுகிறது.
பக்தர்கள் முதல் நாள் எந்தக் கிழமையில் வழிபாட்டை தொடங்குகிறார்களோ, அதே கிழமையில் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் குழந்தையுடன் கோயிலுக்கு வர வேண்டும். ஒவ்வொரு வாரமும் தேங்காயில் நெய்தீபம் ஏற்றி, கோயிலை ஒன்பது முறை வலம் வருவது வழக்கம்.
அதன் பின்னர் குழந்தையின் முகத்தில் சங்கு தீர்த்தம் தெளிக்கப்படுகிறது. மேலும், ஒரு வாரத்திற்கு வழங்கப்படும் தீர்த்தத்தை வீட்டிலும் குழந்தைக்கு வழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.
கூடாரவல்லி திருவிழா
மார்கழி மாதத்தில் நடைபெறும் கூடாரவல்லி திருவிழா இத்தலத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாகும். 108 வகையான திரவியங்கள், மூலிகைகள், பூக்கள், பழங்கள், காய்கறிகள், வெட்டிவேர் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட கூடாரத்தில் ஆண்டாள் நாச்சியார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அன்று திருப்பாவை பாராயணம் நடைபெறும். திருமணத் தடை நீங்கவும், கல்வி வளர்ச்சி, செல்வ வளம், தொழில் மற்றும் வியாபார முன்னேற்றம் கிடைக்கவும் இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.
தல வரலாறு
தெலுங்குச் சோழ மன்னர்கள் கோயிலில் மூன்று விளக்குகள் என்றும் அணையாமல் எரிய 14 பணமும், பதினெண் கலம் நெல்லும் தானமாக வழங்கினர். ஆனால், அந்தப் பொறுப்பை ஏற்ற ஊர்ப் பட்டன், அந்த நிதியை கோயிலுக்காக முறையாக பயன்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், ஊரில் பிறக்கும் பெண் குழந்தைகளைக் கொல்வதற்கும் அவர் உடந்தையாக இருந்ததாகவும், இறந்த குழந்தைகளுக்குப் பயன்படுத்திய பாலை பெருமாளுக்கு திருமஞ்சனத்தில் பயன்படுத்தியதாகவும் தல வரலாறு கூறுகிறது.
இதனால் கோபமடைந்த பெருமாள், அந்தப் பட்டனையும் ஊரையும் தண்டித்ததாக ஐதீகம் கூறுகிறது. பின்னர் கல்வெட்டுகள் மூலம் இந்த சம்பவத்தை அறிந்த பெரியவர்கள் பெருமாளிடம் மன்னிப்பு கோரி கோயிலை மீண்டும் எழுப்பி சிறப்பாக பராமரித்தனர். தவறைச் சுட்டிக்காட்டி நீதியை நிலைநாட்டியதால், இத்தல இறைவன் “பேசும் பெருமாள்” என்ற திருநாமம் பெற்றதாக கூறப்படுகிறது.
முக்கிய திருவிழாக்கள்
தமிழ்ப்புத்தாண்டு, வைகாசி விசாகம் (15 கிராமங்களின் கருடசேவை), ஆடிப்பூரம், கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகள், தீபாவளி, விஷ்ணு கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி, ஆங்கிலப் புத்தாண்டு, கூடாரவல்லி விழா, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், ரதசப்தமி, மாசி மகம் (108 கோ பூஜை), பங்குனி உத்திரம் (திருக்கல்யாணம்), ஸ்ரீ ராமநவமி உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
எப்படி செல்வது?
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் கூழம்பந்தல் அமைந்துள்ளது. பேருந்து நிறுத்தம் அருகிலேயே திருக்கோவில் உள்ளது.
- அருகிலுள்ள ரயில் நிலையம்: காஞ்சிபுரம்
- அருகிலுள்ள விமான நிலையம்: சென்னை

